குறுங்கதை:
செந்தில் அந்த மளிகைக்கடை கொட்டாரத்துக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமயம்தான் வெளியில் நின்ற பழைய பேப்பர்க்காரன் உள்ளிருக்கும் கடைக்காரனிடம் சொல்லிக்கொண்டான்.
“குணசேகர் செத்துட்டானாம்ல ஆக்சிடண்ட்ல...”
குனிந்து இமிளியை(கஸ்டமர் அப்படித்தான் கேட்டான்)அள்ளியவன் நிமிர்ந்து ‘எந்த குணசேகர்?’ என்றான்.வெளியில் நின்ற பேப்பருக்கு வெய்யில் அதிகம்.உள்ளே நுழைந்தவாறு ‘உச்’ கொட்டிக்கொண்டே சொன்னான்.செந்தில் முதலில் அந்த ‘உச்’ வெயிலுக்கு என நினைத்தான்.பின்பு செத்துப்போன குணசேகரை தெரியாமல் இருக்கிறானே இவன்- என அலுத்துக்கொண்டதாக நினைத்தான்.
“கொளத்துகிட்ட கட...மணி இல்ல...அவன் தம்பிப்பா...குடும்பத்தோட காரில் போயிருக்கான்...”
கடைக்காரனுக்கு ஆள் யாரென இப்போதும் சரியாக பிடிபடவில்லை.புளி இன்னும் கையில் இருப்பதை கண்டு இப்போது செந்தில் அந்த வாடிக்கையாளரை வேடிக்கை பார்த்தான்.அவன் வாய் ஏன் இன்னும் ‘உச்’ சொல்லவில்லை என நினைத்தான்.
அந்த வழுக்கையா ஒரு பயன் இருப்பானே...அவனா?
“வழுக்கையான்னு சரியாய் தெரியல...ஓங்கடக்கு கூட அட்டபொட்டி எடுக்க வரமாட்டான் மணி அவன் தம்பிப்பா...”என சொல்லிவிட்டு ‘உச்’ என்றான் பேப்பர்.இப்போதுதான் செந்திலுக்கு பேப்பர் சொல்லிக்கொண்டிருக்கும் ‘உச்’ புரிந்தது.அதாவது ஒருவனின் துர்மரணத்திற்கான ‘உச்’ அது.சக மனிதனின் மரணம் தனக்கானது என நினைத்த பொழுது எழும் ‘உச்’.
ஒரு ஓரத்தில் செந்திலுக்கே தெரியாமல் மறைந்து நின்றிருந்த கடைக்காரனின் அம்மா,விசயத்தை பாதி கேட்டுவிட்டு கேட்டாள் “ஆபத்து ஏதும் இல்லையே?”
புளியை மடித்துக்கொண்டே சின்னமாய் சிரித்துக்கொண்டும் சொன்னான் “உசுரே போயிருச்சாம்...”அப்போது பேப்பரும் சிரித்தான்.பின்பு ஒருமுறை “உச்” சொல்லிவிட்டு நகர்ந்தான்.
செந்திலுக்கு மட்டும் கீழ்க்கண்ட சந்தேகங்கள் இருந்து கொண்டிருந்தது.
விபத்தில் பலவகைகள் உண்டே...இவன் எப்படிச்செத்தான்?
குணசேகர் ஏன் குடும்பத்துடன் போகிறான்?
ஒருவேளை டயர் தெறித்து இருந்தால் அது என்ன பிராண்ட்?
மரத்தில் விட்டிருந்தால் அந்நேரம் ஓட்டுனருக்கு வந்த குறுஞ்செய்திதான் என்ன?
இமிளி என இந்திக்காரர்கள் சொன்னவுடன் புளியில் கை வைக்க எப்படி கற்றுக்கொண்டான் இந்த கடைக்காரன்?
அவன் அம்மா அப்படிக்கேட்டதும் ஏன் அவர்கள் சிரித்தார்கள்?
குணசேகரை அவன் மனைவி வெறுத்தாளா?
Comments
Post a Comment